கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகி வருகிறது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகி வருகிறது.
நெல் மூட்டைகள் தேக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்காக மாவட்டம் முழுவதும் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டன.
இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிடங்கு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
இந்த ஆண்டு சம்பா உற்பத்தி அதிகமானதால் கிடங்குகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் 25 ஆயிரம் டன் நெல் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது என்று நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் வேதனை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் மூட்டைகள் மாதக்கணக்கில் வெயிலில் கிடப்பதால் அடிமூட்டைகள் சேதம் அடைந்து விடும். மேலும் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் கால்நடைகள் தின்று வீணாக்குகிறது.
கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர், மல்லியம், முளப்பாக்கம், மங்கைநல்லூர், பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது என்றனர்.
பாதுகாக்க வேண்டும்
இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் கூறுகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க வழங்கப்பட்ட தார் பாய்கள் போதுமானதாக இல்லை. மேலும் தார் பாய்கள் சேதமடைந்து உள்ளதால் அதனை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாவதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவது வேதனையாக உள்ளது. எனவே நெல் மூட்டைகளை அரசு விரைவில் சேமிப்பு கிடங்குக்கு எடுத்து சென்று பாதுகாக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story