கோடையை குளிர்வித்து மக்களை மகிழ்வித்த மழை


கோடையை குளிர்வித்து மக்களை மகிழ்வித்த மழை
x
தினத்தந்தி 15 April 2021 6:28 PM GMT (Updated: 15 April 2021 6:28 PM GMT)

கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை பகுதியில் பெய்த மழையினால் குளுமையான சூழ்நிலை நீடித்தது

காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை பகுதியில் பெய்த மழையினால் குளுமையான சூழ்நிலை நீடித்தது.
கோடைமழை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதுதவிர பல்வேறு இடங்களில் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பகல் நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளில் முடங்கி இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் மிதமான வெயில் அடித்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் திடீரென வானம் மேகமூட்டாக காணப்பட்டது. இதைதொடர்ந்து திடீரென பல்வேறு இடங்களில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
காரைக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் மதியம் 2 மணிக்கு வானம் கருமேக கூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்து. இதனால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுதவிர காரைக்குடியை சுற்றியுள்ள கோட்டையூர் பகுதியிலும் மதியம் சுமார் 30 நிமிடங் கள் வரை மழை பெய்ததால் அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். காரைக்குடியை அடுத்த கல்லல் பகுதியில் நேற்று மதியம் 3 மணிக்கு பெய்த மழை சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.
குளுமையான சூழ்நிலை
இதனால் அந்த பகுதியில் குளுமையான சூழ்நிலை நீடித்தது. இதேபோல் தேவகோட்டை பகுதியில் நேற்று மதியம் 3 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் வரை பெய்ததால் நகர் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று தேவகோட்டை மற்றும் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நீடித்தது. 
இதேபோல் மானாமதுரை பகுதியிலும் மதியம் வேளையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் கோடை மழை பெய்து மக்களை குளிர்விக்க செய்தது. இதேபோல் சிங்கம்புணரி, திருப்புவனம், காளையார்கோவில் இளையான்குடி உள்ளிட்ட பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. சிவங்கை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் குளுமையான நிலை நீடித்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story