அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவும் கலெக்டர் ராமன் எச்சரிக்கை


அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவும் கலெக்டர் ராமன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 April 2021 8:39 PM GMT (Updated: 15 April 2021 9:18 PM GMT)

அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழல் ஏற்பட்டு உள்ளது என்று கலெக்டர் ராமன் எச்சரித்து உள்ளார்.

சேலம்:
அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழல் ஏற்பட்டு உள்ளது என்று கலெக்டர் ராமன் எச்சரித்து உள்ளார்.
கொரோனா வைரஸ்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். தொற்று ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அபராதம் வசூல்
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து  கொள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து இதுவரை மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று மிகத்தீவிரமாக பரவும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள்
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தேவையான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story