சென்னிமலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேர் கைது


சென்னிமலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 10:56 PM GMT (Updated: 15 April 2021 10:56 PM GMT)

சென்னிமலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வீட்டில் நகை, பணம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை
சென்னிமலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வீட்டில் நகை, பணம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆம்புலன்ஸ் டிரைவர்
சென்னிமலை காமராஜ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 2-ந் தேதி கரூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க சென்றுவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு மீண்டும் மணிகண்டன் திரும்பி வந்து உள்ளார். 
திருட்டு
அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்ததது. 
கைது
இதுகுறித்து சென்னிமலை போலீசில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். 
இந்த நிலையில் நேற்று சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு காந்தி நகர் பஸ் நிறுத்தத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (25), ஆனந்தன் (34) என்பதும், மணிகண்டனின் நண்பர்களான இவர்கள் 2 பேர் மற்றும் சென்னிமலை அருகே உள்ள வவ்வால் காட்டை சேர்ந்த விஜயகுமார் (24), ஈங்கூர் ரோட்டை சேர்ந்த பூபாலன் (24) என 4 பேர் சேர்ந்து மணிகண்டனின் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியது,’ ெதரியவந்தது. இதைத்தொடர்ந்து நவீன்குமார், ஆனந்தன் ஆகிய 2 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் விஜயகுமார் மற்றும் பூபாலனையும் கைது செய்தனர். இதில் விஜயகுமார் என்பவர் கடந்த ஆண்டு அறச்சலூர் அருகே குடுமியாம்பாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட பொருட்களை திருடியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 பவுன் நகை, வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story