காரில் வந்து கைவரிசை வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள்


காரில் வந்து கைவரிசை வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 16 April 2021 2:13 AM GMT (Updated: 16 April 2021 2:13 AM GMT)

காரில் வந்த கொள்ளையர்கள், வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், காந்தி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சந்திரா (வயது 73). தனது மகளுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 7 மணி அளவில் சந்திரா, தனது வீட்டின் வாசல்படி அருகே அமர்ந்து இருந்தார்.

அப்போது வெள்ளை நிற கார் அவரது வீட்டின் முன்பு வந்து நின்றது. காரில் 2 பேர் இருந்தனர். அதில் ஒருவர், காரில் இருந்து இறங்கி, சந்திரா வீட்டின் கேட்டை திறந்து உள்ளே வந்தார்.

அவர் திடீரென வீட்டின் வாசல்படி அருகே அமர்ந்து இருந்த மூதாட்டி சந்திராவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

இதனால் மூதாட்டி சந்திரா அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையன் சங்கிலியை பிடித்து இழுத்ததில் சந்திராவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளையர்கள் வந்து சென்ற கார் பதிவாகி இருந்தது. ஆனால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க காரின் பதிவு எண்ணை அழித்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள், தற்போது முதல்முறையாக காரில் வந்து சங்கிலி பறித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story