கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிக்க அவர் தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.
திரு.வி.க. நகர்,
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆண் ஒருவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர், சென்னை அயனாவரம் மேட்டு தெருவைச் சேர்ந்த ஹரிநாத்(வயது 37) என்பது தெரியவந்தது. சொத்து தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தந்தை ஜெய்சிங்(80), சகோதரி சங்கீதா ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிஓடிவிட்டார். இதுபற்றி அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமைறைவான ஹரிநாத்தை தேடி வந்தனர்.
இந்த கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற முயற்சித்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்ைல. இதனால் விரக்தி அடைந்த ஹரிநாத், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்க இதுபோல் தற்கொலை முயற்சி நாடகமாடியது தெரியவந்தது. மேலும் அயனாவரம் இன்ஸ்பெக்டர் நெடுமாறனை ஹரிநாத் அசிங்கமாக பேசியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அயனாவரம் போலீசார் ஹரிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story