கொரோனா தொற்றை கட்டுப்படுத்தமுககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் அறிவுரை


கொரோனா தொற்றை கட்டுப்படுத்தமுககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் அறிவுரை
x
தினத்தந்தி 16 April 2021 5:27 PM IST (Updated: 16 April 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்தவேண்டும் என்று மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் கூறினார்.

திருவண்ணாமலை

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருமான தீரஜ்குமார் கலந்து கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். 

தீவிரப்படுத்த வேண்டும்

அப்போது முககவசம் அணிவது குறித்து பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

 திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை, ஆயுஸ் மருத்துவமனை மற்றும் செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மட்டுமின்றி கூடுதலாக மாவட்டத்தில் 11 இடங்களில் அமைக்கப்பட உள்ள சிறப்பு வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. தேவையான பகுதிகளில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story