ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 16 April 2021 7:49 PM IST (Updated: 16 April 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா கட்டுப்பாடுகளால் வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஊட்டி

கொரோனா கட்டுப்பாடுகளால் வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

பல்வேறு கட்டுப்பாடுகள் 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து  சுற்றுலா தலங்களிலும் 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

பூங்காவில் சுற்றுலா பயணிகள் புல்வெளி மைதானத்துக்குள் நுழைய தடை செய்யப்பட்டு உள்ளது. 

புல்வெளிகளில் அமரக்கூடாது, உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற தவறினால் அபராதம் விதிக்கப்படும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வர இ-பதிவு முறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேற்கண்ட கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பீதியால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

மேலும் ரம்ஜான் நோன்பு தொடங்கியதால் கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது. 

இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா நடைபாதை, நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர்.

இதனால் நுழைவு டிக்கெட் வழங்குமிடம் வெறிச்சோடி காணப்பட்டது. புல்வெளிக்குள் நுழைய தடை உள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 

கடந்த 12-ந் தேதி 2,583 பேர், 13-ந் தேதி 2,139 பேர், 14-ந் தேதி 1,924 பேர்,  1,175 பேர் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்து உள்ளனர். 

பணியாளர்கள் கண்காணிப்பு 

கொரோனா அச்சத்தால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூங்காவை சுற்றி பார்க்க ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

அவர்கள் வாங்கும் டிக்கெட்டில் பூங்காவில் இருந்து வெளியேறும் நேரம் குறிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்று பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். 

இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.


Next Story