சாலையோரங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்


சாலையோரங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 16 April 2021 8:59 PM IST (Updated: 16 April 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

வடபொன்பரப்பியில் சாலையோரங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையோரங்களில் குளம்போல் தேங்கி நிற்பதை காண முடிகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை மற்றும் பிரம்மகுண்டம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இது தவிர இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பும் கழிவுநீர் தேங்கி நிற்பது அங்கு வரும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. 

தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கை மற்றும் கைகுட்டையால் மூக்கை பொத்திக்கொண்டு செல்வதை காண முடிகிறது. இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. மாலை நேரம் ஆனதும் கொசுக்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு படையெடுக்க தொடங்கி விடுகின்றன. இதனால் எங்கே மலேரியா, யானைக்கால் போன்ற கொடிய நோய்களின் பிடியில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்துடன் வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.  

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தற்போது கொரோனா அச்சம் ஒருபக்கம் அச்சுறுத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளதால் உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்துக்கு 2 பக்கமும் இடி என்பது போல் எங்கள் நிலைமை ஆகிவிட்டது. எனவே பொதுமக்களின் மனவேதனையை உணர்ந்து சாலையோரங்களில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, மேற்கொண்டு கழிவுநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 


Next Story