மதுரையில் மேலும் 167 பேருக்கு கொரோனா


மதுரையில் மேலும் 167 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 April 2021 3:58 PM GMT (Updated: 16 April 2021 3:58 PM GMT)

மதுரையில் நேற்று புதிதாக 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

மதுரை,ஏப்
மதுரையில் நேற்று புதிதாக 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.
கொரோனா வைரஸ்
மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் புதிதாக 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 128 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 116 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 82 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 1,773 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களில் 625 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், 500 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல, அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் நிகழாத நிலையில் தற்போது உயிரிழப்புகளின் எண்ணக்கையும் அதிகரித்துள்ளது.
மதுரையை பொறுத்தமட்டில் நாளொன்றுக்கு 4500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி மதுரையில் இதுவரை 8 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோல், 1 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
படுக்கை வசதிகள் என்ன?
மதுரை மாவட்டத்தில் மதுரை, திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிகளிலும், ரெயில்வே மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, 2 கொரோனா கேர் சென்டர்கள் மற்றும் 41 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஆஸ்பத்திரிகளில் 1,937 படுக்கைகளும், கொரோனா கேர் சென்டர்களில் 700 படுக்கைகளும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி அரசு ஆஸ்பத்திரிகளில் 640 பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story