கோவேக்சின் தட்டுப்பாடு


கோவேக்சின் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 16 April 2021 11:22 PM IST (Updated: 16 April 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடும் சமயத்தில் ராமநாத புரத்தில் கோவேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம், 
கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடும் சமயத்தில் ராமநாத புரத்தில் கோவேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் மீண்டும் இரண்டாம் அலை உருவெடுத்து வேகமாக பரவி வருகிறது.  இதன் காரணமாக மத்திய-மாநில அரசுகள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரமாக கடைபிடித்து நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 
மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் 14 முதல் 16-ந் தேதிவரை தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் அனைத்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
பொதுவாக கோவேக்சின் தடுப்பூசி மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 வகைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பலர் கோவேக்சின் தடுப்பூசியையும், சிலர் கோவிஷீல்டு தடுப்பூசியையும் விரும்பி போட்டு வருகின்றனர். 
குற்றச்சாட்டு
இந்தநிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போடவரும் பொதுமக்கள் கோவேக்சின் போடுமாறு கூறும்போது மேற்கண்ட ஊசி குறைவாக உள்ளதாகவும் ஸ்டாக் இல்லை என்றும் அதற்கு மாற்றாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மருத்துவ பணியாளர்கள் கூறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது கோவேக்சின் தடுப்பூசி குறைந்த அளவு இருப்பு உள்ளதாகவும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி 28 நாட்களில் போட வேண்டிய அவசியம் உள்ளதால் தற்போது இருப்பு உள்ள மருந்தினை அவர்களுக்கு பயன் படுத்து வதற்காக வைத்துள்ளதாகவும் எனவே போதிய இருப்பு உள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மற்றவர்களுக்கு போட முடிவு செய்துள்ளதாகவும் கூறி உள்ளனர். 
கவலை
இரண்டு தடுப்பூசிகளில் பொதுமக்கள் பெரும்பாலும் கோவேக்சின் தடுப்பூசியை அதிகம் விரும்பி போட்டு வரும் நிலையில் மேற்கண்ட தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறையினர் அரசிடம் வலியுறுத்தி தேவையான அளவுக்கு கோவேக்சின் பெற்று பொதுமக்களுக்கு தடுப்பூசிபோட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story