வானகிரி மீனவ சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது


வானகிரி மீனவ சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2021 6:34 PM GMT (Updated: 16 April 2021 6:34 PM GMT)

படகில் வைத்து மீனவரை அடித்துக் கொன்ற வழக்கில் வானகிரி மீனவ சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொறையாறு:
படகில் வைத்து மீனவரை அடித்துக் கொன்ற வழக்கில் வானகிரி மீனவ சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாய்த்தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மற்றும் வானகிரி கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் காலை சின்னங்குடி அருகே கடலுக்கு சென்று மூன்று கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துகொண்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை மீனவர்கள் மீன்பிடிக்க வீசிய வலையின் மேல் பூம்புகார் அருகே வானகிரி மீனவர்கள் மற்றொரு வலையை. வீசியதாக தெரிகிறது.
 இதனால் தங்களது வலை சேதமடையும் என புதுப்பேட்டை மீனவர்கள் எச்சரித்தனர். இதனையடுத்து இரு கிராம மீனவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வானகிரி மீனவர்கள் தங்களது படகு மூலம் புதுப்பேட்டை மீனவர்களின் படகு மீது மோதி படகை சேதப்படுத்தினர். 
மீனவர் சாவு
அப்படியும் ஆத்திரம் தனியாத அவர்கள் இரும்பு குழாய், கட்டை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் புதுப்பேட்டை கிராம மீனவர் மூர்த்தி (வயது 45). என்பவரின் தலையில் பலத்த அடிப்பட்டது. இதில். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி படகிலேயே விழுந்தார். 
இதைபார்த்ததும் வானகிரி மீனவர்கள் உடனடியாக தங்களது படகில் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். மயங்கியநிலையில் கிடந்த மூர்த்தியை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து சிகிச்சைக்காக புதுப்பேட்டையில் இருந்து காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
இதுகுறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் புதுப்பேட்டை மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து பூம்புகார் போலீஸ் நிலையத்தில் வழக்கை ஒப்படைத்தனர். அதன்பேரில் பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நாகரத்தினம் தலைமையில் போலீசார் வானகிரி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வானகிரியை சேர்ந்த சதீஷ் (வயது 20) ஏழுமலை (23), செல்லதுரை (26), ராஜீவ்காந்தி (35) மற்றும் 13, 14 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து சதீஷ், ஏழுமலை, செல்லதுரை, ராஜீவ்காந்தி ஆகியோரை சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொறையாறு கிளை சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 2 பேரை நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Next Story