விராலிமலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல் போலீசார் விசாரணை


விராலிமலையில்   டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்   போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 April 2021 7:29 PM GMT (Updated: 16 April 2021 7:29 PM GMT)

விராலிமலையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை:
டாஸ்மாக் ஊழியர்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு சாலை அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா சாரான்குடியை சேர்ந்த மனக்கராஜ் (வயது 45) என்பவர் மேற்பார்வையாளராகவும், விராலிமலை தாலுகா தென்னம்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) என்பவர் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மற்றொரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலைபார்க்கும் விராலிமலையை சேர்ந்த செந்தில் (45) என்பவர் மது வாங்கிக்கொண்டு டாஸ்மாக் கடையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட மர்ம கும்பல், செந்திலை மறித்து கழுத்தில் கத்தியை வைத்து குண்டுகட்டாக தூக்கி அருகே இருந்த குளத்திற்குள் கொண்டு சென்று கை மற்றும் கால்களை கட்டி போட்டு அவரை அரிவாளால் இடது கை விரலை வெட்டியும், உடலில் கத்தியால் குத்தினர். பின்னர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வேகமாக சென்று விட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதைபார்த்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மனக்கராஜ், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தபோது அவர்களையும் அந்த மர்ம கும்பல் ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் மனக்கராஜ், கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதற்கிடையே படுகாயங்களுடன் கிடந்த செந்திலை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்ப்பாட்டம் 
இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கப்பட்ட 3 பேரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த 3 பேர் தங்களை தாக்கியது யார்? என தெரியவில்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த 3 பேரையும் தாக்கிய மர்ம கும்பல் யார்? அவர்களுக்குள் முன் விரோதமா? என்ற கோணத்தில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மதியம் விராலிமலை மாதிரிபட்டி டாஸ்மாக் கடை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் உயிர் பாதுகாப்பு, நேரம் குறைத்தல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story