காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 303 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக காஞ்சீபுரத்தில் 17 பேரும், காஞ்சீபுரம் பெரு நகராட்சியில் 69 பேரும், குன்றத்தூரில் 66 பேரும், குன்றத்தூர் பேரூராட்சி பகுதிகளில் 13 பேரும், மாங்காடு பேரூராட்சி பகுதிகளில் 17 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 63 பேரும், உத்திரமேரூரில் 3 பேரும், வாலாஜாபாத்தில் 2 பேரும், மற்ற மாவட்டங்களில் 49 பேரும் என 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளாக 45 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் பெரு நகராட்சியை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்தில் 404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் பெரு நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் ஒரே பகுதியில் 3-க்கும் மேற்ப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதால் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி 15 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தகடுகள் மூலம் அடைக்கப்பட்டு அந்த பகுதியில் தொடர்ந்து நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளில் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும் கோவில் நகரமான காஞ்சீபுரம் நகரில் புகழ்பெற்ற கோவில்களுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ளவரும் பக்தர்களுக்காக சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






