வாழப்பாடி குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது
வாழப்பாடி:
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த 3 வயதுடைய ஆண் குரங்கு ஒன்று, வாழப்பாடி பேரூராட்சி எழில்நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அந்த குரங்கு சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியோர்களை அச்சுறுத்தி வந்ததோடு, வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வந்தது.
எனவே இந்த குரங்கை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வாழப்பாடி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் உத்தரவின் பேரில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு குரங்கை பிடிப்பதற்கு கூண்டு கொண்டு வரப்பட்டு, குரங்கு நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டது.
ஆனால் 15 நாட்களாக கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு ஏமாற்றத்தை கொடுத்து வந்த அந்த குரங்கு கூண்டிற்குள் வைக்கப்பட்டிருந்த வாழைப்பழம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை தின்பதற்கு உள்ளே சென்றபோது நேற்று முன்தினம் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அந்த குரங்கை மீட்ட வனத்துறையினர், கோதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story