விருதுநகரில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடையாத நிலை


விருதுநகரில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடையாத நிலை
x
தினத்தந்தி 18 April 2021 10:01 PM GMT (Updated: 2021-04-19T03:31:19+05:30)

விருதுநகரில் கடந்த 13 ஆண்டுகளாக முடிவடையாத பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
விருதுநகரில் கடந்த 13 ஆண்டுகளாக முடிவடையாத பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
பாதாள சாக்கடை திட்டம்
தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் விருதுநகர் நகராட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது.
 திட்டப்பணி தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில் பணி முடிவடையும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில் 13 ஆண்டுகள் ஆகியும் திட்ட பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. இத்திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்ட நிலையில் நிதி மேலாண்மையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. 
வீடுகளுக்கு இணைப்பு 
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாதநிலையில் திட்டப்பணி பல்வேறு காலகட்டங்களில் முடங்கியநிலையில் தற்போது வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் 30 சதவீத வீடுகளுக்கு இணைப்பு கொடுக்காத நிலை நீடிக்கிறது. நகராட்சி நிர்வாகமும் எப்போது இந்த பணி முடிவடையும் என்று உறுதி சொல்ல முடியாத நிலையே உள்ளது.
மோட்டார் பழுது 
இந்தநிலையில் விருதுநகர் அருகே மாத்தி நாயக்கன்பட்டியில் பாதாள சாக்கடை குழாய்களில் வரும் கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
 மேலும் புல்லலக்கோட்டை ரோடு, கல்லூரி சாலை மற்றும் விஸ்வநாததாஸ் காலனி ஆகிய 3 இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி சாலை மற்றும் விஸ்வநாததாஸ் காலனியில் உள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் மின் மோட்டார் பழுது காரணமாக கழிவுநீர்வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது.
ஆள் இறங்கும் குழி 
 மேலும் அவ்வப்போது பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு ஆள் இறங்கும் குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறும் நிலை உள்ளது.
 இதனை தவிர்க்க முடியவில்லை என்றாலும் உடனடியாக இதனை சீரமைக்காத நிலை நீடிக்கிறது. இதனால் நகரில் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. தற்போது கோவிந்தராம் நகரில் கழிவு நீர் ஓடுவதால் சுகாதாரகேடு ஏற்படும் நிலைஉள்ளது. பாதாள சாக்கடை குழாய்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரகேடு 
 ஆனால் மழைநீர் மற்றும் இதர கழிவு நீர் வடிகால் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த காலங்களில் முக்கிய பகுதிகளில் உள்ள பிரதான கழிவுநீர்வடிகால்களை ஒட்டுமொத்தமாக தூர்வாரும் பணி நடைபெறுவது உண்டு.
 ஆனால் தற்போது அது முற்றிலுமாக கைவிடப்பட்டு விட்டது. 
இந்நிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளிலும் இதர பகுதிகளிலும் மழைநீர் வடிகாலில் மழை பெய்யும் காலங்களில் கழிவுநீர் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது
 கோரிக்கை 
எனவே நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
அதுவரை சாலைகளில் கழிவு நீர் வெளியேறினால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story