சித்திரை மாத பிரம்மோற்சவ விழா: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்


சித்திரை மாத பிரம்மோற்சவ விழா: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 19 April 2021 2:05 AM GMT (Updated: 19 April 2021 2:05 AM GMT)

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் மிகவும் பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதி சுவாமிக்குத் திருமஞ்சனமும், 26-ந் தேதி ஆள் மேல் பல்லக்கும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், கண்ணாடி பல்லக்கு உற்சவமும் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக சாமி திருவீதி உலா புறப்பாடு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் வேண்டுகோள்

இதைத் தொடர்ந்து நாள்தோறும் நடைபெறும் வைபவங்கள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில் நடைபெறும் . அப்போது, சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த நிலையில், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரியும் பக்தர்கள் உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து அரசின் கொரோனா வழிகாட்டு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வரவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில் வளாக நுழைவு வாயில் முன்பு கோவிலுக்கு நுழையும் பக்தர்களுக்கு கைகளில் தடவக் கூடிய கிருமி நாசினிகளையும் கோவில் நிர்வாகத்தினர் வழங்கி வருகிறார்கள்.

Next Story