குடியாத்தம் அருகே முகாமிட்டிருந்த 12 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு


குடியாத்தம் அருகே முகாமிட்டிருந்த 12 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 19 April 2021 1:26 PM GMT (Updated: 2021-04-19T18:56:21+05:30)

குடியாத்தம் அருகே முகாமிட்டிருந்த 12 காட்டு யானைகள் அடர்ந்த காட்டுப்பகுத்க்கு விரட்டியடிக்கப்பட்டன.

குடியாத்தம்

காட்டு யானைகள்

ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மோர்தானா, சைனகுண்டா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, மோடிகுப்பம்வலசை, டி.பி.பாளையம், கொத்தூர், அனுப்பு, கதிர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து மா, வாழை, நெல், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை தினம்தோறும் நாசப்படுத்தி வருகிறது. 

இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வனத்துறையினர், விவசாயிகளுடன் இணைந்து யானைகள் கூட்டத்தை விரட்டி வருகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் மீண்டும் அந்த யானைகள் கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை விளைவித்து வருகிறது.

விரட்டியடிப்பு

இந்த நிலையில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில், வனவர்கள் முருகன், மாசிலாமணி, நேதாஜி உள்பட வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் நேற்று காலையில் கொட்டமிட்டா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 12 யானைகள் கொண்ட கூட்டத்தை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும், பிளாஸ்டிக் பைப்பில் துப்பாக்கி போன்ற பொருளில் கார்பைட் கல் பொருத்தி வானத்தை நோக்கி சுட்டும் யானைகளை விரட்டினர்.

பல மணி நேரம் போராடி அந்த யானைகள் கூட்டத்தை அடர்ந்த மோர்தனா வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். மற்றொரு வனத்துறை குழுவினர் நேற்று மாலையில் இருந்து அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வராதவகையில் கண்காணித்து வருகின்றனர்.


Next Story