வேடசந்தூர் அருகே லாரி மோதி 2 பெண்கள் பலி


வேடசந்தூர் அருகே லாரி மோதி 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 19 April 2021 2:15 PM GMT (Updated: 19 April 2021 2:15 PM GMT)

வேடசந்தூர் அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 
நூற்பாலை தொழிலாளர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி அலமேலு (53). அதே ஊரை சேர்ந்த திருமலைசாமி மனைவி விஜயா (55). இவர்கள் 2 பேரும் வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். கிரியம்பட்டியில் இருந்து நூற்பாலைக்கு 2 பேரும் நடந்து செல்வது வழக்கம். 
அதன்படி நேற்று காலை அலமேலுவும், விஜயாவும் கிரியம்பட்டியில் இருந்து நூற்பாலைக்கு வழக்கம்போல் நடந்து சென்று கொண்டிருந்தனர். விட்டல்நாயக்கன்பட்டி அருகே திண்டுக்கல்-வேடசந்தூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் 2 பேரும் நடந்து சென்றனர்.
லாரி மோதியது
அப்போது மதுரையில் இருந்து சேலம் நோக்கி மளிகை பொருட்கள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரி திடீரென்று சாலையோரமாக நடந்துசென்ற அலமேலு, விஜயா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அலமேலு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜயா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
உடனே அவர்கள், விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜயாவும் இறந்துபோனார். 
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் சிவகங்கையை சேர்ந்த முனீஸ்வரன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், விபத்து நடந்த இடத்தில் லாரி வந்து கொண்டிருந்தபோது லேசாக கண் அசந்து தூங்கிவிட்டதாகவும், அந்த அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். 
லாரி மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் வேடசந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story