விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அனுமதி


விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அனுமதி
x
தினத்தந்தி 19 April 2021 4:25 PM GMT (Updated: 2021-04-19T21:55:52+05:30)

விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அனுமதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

ஊட்டி

விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அனுமதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

கொரோனா சிகிச்சை மையம்

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதன்படி விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அனுமதி உள்ளது. ஊட்டியில் விடுதிகள், காட்டேஜ்கள் அதிகளவில் உள்ளன. 

தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த மையமானது தனியார் டாக்டர்கள் மூலம் செயல்படலாம். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக விடுதிகள், தனியார் மருத்துவமனைகள் தாமாக முன்வந்து அனுமதி கோரலாம். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக அரசு உத்தரவின்படி தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம். இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் 7 தனியார் மருத்துவமனைகளிடம் கேட்கப்பட்டது. இதில் விடுதிகள், ஓட்டல்களுடன் இணைந்து செயல்பட 3 மருத்துவமனைகள் முன்வந்து உள்ளது.

ஆய்வு செய்து அனுமதி

அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று மருத்துவ பணிகள் இணை இயக்குனர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும். இந்த மையத்தில் சிகிச்சை பெற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. நீலகிரியில் மொத்தம் 7 லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது 1,800 டோஸ் தடுப்பு மருந்து இருப்பு உள்ளது. 2 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பு மருந்து வரவழைக்கப்படுகிறது. 

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் வசதி உள்ளது. 6 கிலோ லிட்டர் டேங்க் வசதி ஏற்படுத்த அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரத்தில் இந்த டேங்க் வந்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story