வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு, சிவபெருமான் திருமண தரிசன விழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கும் திருமண தரிசன விழா நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வேதாரண்யம்:-
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கும் திருமண தரிசன விழா நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான சிவன் கோவிலான இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
இக்கோவிலில் சிவபெருமான், அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்ததாக ஐதீகம். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும், பார்வதியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
தல வரலாறு
முன்பு ஒரு காலத்தில் சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தபோது தேவர்கள், முனிவர்கள், பக்தர்கள் அனைவரும் அங்கு கூடியதால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்ததாகவும், உலகம் சமநிலை தன்மையை இழந்தது.
இதுபற்றி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து தென்திசை சென்று உலகத்தை சமநிலைப்படுத்தும் படி கூறினார். அதற்கு சிவபெருமானிடம் அகத்திய முனிவர், ‘தங்கள் திருமணத்தை கோடான கோடி மக்கள் இங்கு இருந்து பார்க்கும்போது, எனக்கு அந்த பாக்கியம் இல்லையே’ என்று வருத்தப்பட்டார். அதற்கு சிவபெருமான், ‘நீ தென்திசை சென்று உலகத்தை சமநிலைப்படுத்து நீ எங்கிருக்கிறாயோ அந்த இடத்திற்கு நான் திருமண கோலத்தில் அங்கு காட்சி அளிக்கிறேன்’ என உறுதி அளித்தார் அதை ஏற்று அகத்திய முனிவர் தென்திசை வந்து வேதாரண்யத்தை அடுத்துள்ள அகத்தியன் பள்ளியில் அமர்ந்து தவம் இருக்க உலகம் சமநிலையை அடைந்ததாகவும், சிவபெருமான் கொடுத்த வாக்கை காப்பாற்ற திருமணக் கோலத்தில் வேதாரண்யம் வந்து அகத்திய முனிவருக்கு காட்சி அளித்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
திருமண தரிசன விழா
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கும் திருமண தரிசன விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. இதையொட்டி சிவபெருமான், பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் எழுந்தருளினார். பெருமாள், அகத்தியமுனிவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவை தொடர்ந்து கோவிலில் திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் சந்தனம் பூசப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
Related Tags :
Next Story