நல்லானூர் சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி


நல்லானூர் சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 19 April 2021 5:16 PM GMT (Updated: 2021-04-19T22:46:02+05:30)

நல்லானூர் சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

தர்மபுரி:
நல்லானூர் சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு சிகிச்சை மையம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொேரானா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் மற்றும் மன நலனை மேம்படுத்த பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நல்லானூர் தனியார் கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு யோகா, இயற்கை வாழ்வியல் முறை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சூரிய ஒளி குளியல்
நல்லானூரிலுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் யோகா, இயற்கை வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு மூச்சு பயிற்சி, யோகா பயிற்சி, சூரிய ஒளி குளியல், நீராவி பிடிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிகளின்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பானம் வழங்கப்படுகிறது. இதேபோல் மூக்கை சுத்தப்படுத்தும் முறை, உப்பு கலந்த சூடான நீரில் வாய் கொப்பளிக்கும் முறை ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
வரவேற்பு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை பயன்படுத்துதல் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும், உளவியல் ரீதியாக தங்களை மேம்படுத்தி கொள்ளவும் அளிக்கப்படும் இந்த பயிற்சி மற்றும் இயற்கை வாழ்வியல் முறை சிகிச்சை வரவேற்பை பெற்று உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகிறார்கள் என்று சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.

Next Story