காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை


காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2021 6:23 PM GMT (Updated: 2021-04-19T23:53:49+05:30)

மார்த்தாண்டம் அருகே காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
காதலி பேச மறுப்பு
மார்த்தாண்டம், கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ரெதீஷ் (வயது 30) உள்பட 2 மகன்கள் இருந்தனர். ராஜனும் அவரது மனைவியும் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால், மகன்கள் இருவரும் ராஜனின் தங்கை ரோசியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். அவர்களில் ரெதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர், ரோசியின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே ரெதீஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேச மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரெதீஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை நண்பர்கள் தேற்றி வந்தனர். 
 தற்கொலை
சம்பவத்தன்று இரவு ரெதீஷ் தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் ரெதீசை வேலைக்கு அழைத்துச் செல்ல ரோசியின் கணவர் சதீஷ் சென்றார். அப்போது, வீட்டில் ரெதீஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.  சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து ரெதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
சோகம்
 இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி வருகிறார். காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story