புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை


புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2021 6:49 PM GMT (Updated: 2021-04-20T00:19:35+05:30)

கீரனூர் அருகே முதலிரவுக்கு வற்புறுத்தியதால் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கீரனூர்,ஏப்.20-
கீரனூர் அருகே முதலிரவுக்கு வற்புறுத்தியதால் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுப்பெண்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெம்மாவூர் கிராமத்தை அடுத்த பூச்சிக்குடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்துரை. இவரது மனைவி ரஞ்சனி (வயது 25), எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி திருமணம் நடைபெற்றது. ரஞ்சனி ஏற்கனவே ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இதைஅறிந்த பெற்றோர், ரஞ்சனியை கட்டாயப்படுத்தி பவுன்துரைக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சனி தான் போலீஸ் வேலைக்கு தேர்வாகி உள்ளதாகவும், கர்ப்பம் அடைந்தால் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என கூறி ஒரு மாதமாக ரஞ்சனி முதலிரவுக்கு மறுத்து வந்தார்.
வலுக்கட்டாயமாக...
 இதை ஏற்க மறுத்த ரஞ்சனியின் பெற்றோர் கடந்த 16-ந் தேதி இரவு வலுக்கட்டாயமாக அவரை முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் அதற்கு உடன்படாமல் காலில் அணிந்து இருந்த கொலுசை கழற்றி எறிந்துவிட்டு, இரவு என்றும் பாராமல் வீட்டைவிட்டு வெளியேறி இருட்டுக்குள் ஓடி மறைந்தார்.
இதையடுத்து குடும்பத்தினர் ரஞ்சனியை தேடி சென்றனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதனையடுத்து மறுநாள் காலையிலும் அவரை தேடி சென்றனர். உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
கிணற்றில் பிணமாக மீட்பு
 இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக ரஞ்சனியின் குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்ததில் பிணமாக கிடந்தது ரஞ்சனி என தெரியவந்தது. முதலிரவுக்கு கட்டாயப்படுத்தியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story