அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல்

மங்களமேடு அருகே அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வேலூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் வாசுதேவன் ஓட்டினார். கண்டக்டராக ஏழுமலை பணியில் இருந்தார்.
திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் அந்த பஸ் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட்டை பெற்று சோதனையிட்டார். அப்போது பஸ்சில் ஒரு ஓரமாக ஒரு பை இருந்தது. அந்த பை யாருடையது என்று டிக்கெட் பரிசோதகர் கேட்டார். ஆனால் ஒருவரும் அந்த பைக்கு உரிமை கோரவில்லை.
கஞ்சா பொட்டலங்கள்
இதையடுத்து கண்டக்டர் ஏழுமலையும், டிக்கெட் பரிசோதகரும் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர், பஸ்சை மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்சென்று நிறுத்தினார்.
அங்கு போலீசாரிடம், கஞ்சா இருந்த பை ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார், பஸ்சில் வந்த பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த முஜித்(வயது 34), செல்வம்(36) ஆகியோர் வேலூரில் இருந்து அந்த பஸ்சில் சுமார் 23 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும், தேனிக்கு அதை கொண்டு செல்ல இருந்ததும், தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பஸ்சில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story