நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஒலிபெருக்கி உரிமையாளர்கள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஒலிபெருக்கி உரிமையாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 April 2021 7:56 PM GMT (Updated: 2021-04-20T01:31:26+05:30)

கோவில் விழாக்களுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை மாநகர ஒலி, ஒளி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் ராம்ராஜ், துணைச் செயலாளர் சண்முகராஜா மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது டியூப் லைட், சீரியல் விளக்குகள் ஒலிபெருக்கி குழாய் உள்ளிட்ட பொருட்களுடன் வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஒலி ஒளி அமைப்பாளர்கள் தொழில் செய்து வருகிறோம். இதன்மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பித்தது. அப்போது சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்ட நாங்கள் படிப்படியாக எழுந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கோவில் விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும். இந்த காலகட்டத்தில் தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வறுமையை சந்தித்து உள்ளனர். எனவே கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஒலி ஒளி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story