2 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் சாவு


மகேஸ்வரி
x
மகேஸ்வரி
தினத்தந்தி 19 April 2021 8:29 PM GMT (Updated: 2021-04-20T01:59:08+05:30)

தா.பழூர் அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் இறந்தார். தீக்காயமடைந்த அவரது குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தா.பழூர்:

இரட்டை குழந்தைகள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பூவந்திகொள்ளை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபால். இவர் அங்குள்ள பாண்டிபஜார் கடைவீதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவருக்கும், தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த காந்தியின் மகள் மகேஸ்வரிக்கும் (வயது 29) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை 10 மணி அளவில் தனது செல்போன் கடைக்கு செல்ல புறப்படுவதற்காக ஜெயபால் வீட்டின் வெளிேய உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் குழந்தைகளோடு இருந்த மகேஸ்வரி, வீட்டின் கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
சாவு
வீட்டிற்குள் இருந்து புகை வெளியே வருவதை பார்த்த அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கைகளால் தனது குழந்தைகளை அணைத்தவாறு மகேஸ்வரி தீயில் உடல் கருகிய நிலையில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய குழந்தைகளை உடனடியாக மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீயில் உடல் முழுவதும் கருகிய நிலையில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.
தீவிர சிகிச்சை
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார், மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் குழந்தைகள் தர்ஷன், தர்ஷினி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து மகேஸ்வரியின் தந்தை காந்தி கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக மகேஸ்வரி தீக்குளித்திருக்கலாம் என்று ெதரியவந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். 
திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், மகேஸ்வரியின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்ற கோணத்தில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார். 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொைல செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story