நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்
x
தினத்தந்தி 19 April 2021 8:31 PM GMT (Updated: 2021-04-20T02:01:52+05:30)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதியை 7 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மகன் உதேஷ்ராஜ் (வயது 19). கடந்த சில நாட்களுக்கு முன்பு உதேஷ்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடி உள்ளனர். இதற்கிடையே அந்த மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர், சக நண்பர்களுக்கு தெரியாமல் எடுத்துச் சென்று விட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் உதேஷ்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 15-ந்தேதி பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர் பிரீத்தம் (21) என்பவரை கடத்தி சென்று ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்தனர். அப்போது அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவர் அங்கிருந்து செல்போன் மூலம் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவரை மீட்டனர். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் உதேஷ்ராஜை கைது செய்தனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த உதேஷ் ராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் உதேஷ்ராஜ் போலீசாருக்கு தெரியாமல் நைசாக தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் சாந்தி நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் உதேஷ்ராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
7 மணி நேரத்திற்குள் கைதியை போலீசார் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story