திசையன்விளையில், மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்


திசையன்விளையில், மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 19 April 2021 9:00 PM GMT (Updated: 2021-04-20T02:30:04+05:30)

திசையன்விளையில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திசையன்விளை:
திசையன்விளை அருகே உறுமன்குளம் பஞ்சாயத்து ரம்மதபுரத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மகள் எப்சிபா (வயது 9). இவள் நேற்று முன்தினம் அங்குள்ள கடையில் குளிர்பானம் வாங்கி விட்டு, வீட்டுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அவள், தெருவில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமி எப்சிபாவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அஜாக்கிரதையாக செயல்பட்ட மின்வாரிய அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சிறுமியின் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று  திசையன்விளை போலீஸ் நிலையம் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்புராயலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்ட உறவினர்கள், சிறுமியின் உடலை பெற்றுச்சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.

Next Story