பலத்த காற்றுடன் கன மழை; மரங்கள் சாய்ந்தன


பலத்த காற்றுடன் கன மழை; மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 19 April 2021 9:05 PM GMT (Updated: 19 April 2021 9:05 PM GMT)

உசிலம்பட்டி, அலங்காநல்லூர் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மரம் சரிந்து விழுந்து மாட்டுக்கொட்டகை சரிந்ததால் அங்கு மழைக்காக ஒதுங்கிய விவசாயி பரிதாபமாக இறந்தார்

உசிலம்பட்டி
உசிலம்பட்டி, அலங்காநல்லூர் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மரம் சரிந்து விழுந்து மாட்டுக்கொட்டகை சரிந்ததால் அங்கு மழைக்காக ஒதுங்கிய விவசாயி பரிதாபமாக இறந்தார்.
மரம் சரிந்து விழுந்தது
தமிழ்நாட்டில் வெப்பசலனம் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி, ராஜக்காபட்டி, மானூத்து, ஜோதில்நாயக்கனூர், கோடாங்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. 
இதில் உசிலம்பட்டியில் இருந்து எழுமலை செல்லும் சாலையில் உள்ள எம்.பாறைப்பட்டி என்ற கிராமத்தில் இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமை வாய்ந்த இச்சி மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. தகவலறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை அறுத்து எந்திரம் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் உசிலம்பட்டி எழுமலை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே எர்ரம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 55). விவசாயி. இந்நிலையில் நேற்று மாலையில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. மழை வருவதற்கு முன்னரே பழனியாண்டி மாட்டுக்கொட்டகைக்குள் சென்று ஒதுங்கி இருந்தார்.  பலத்த சூறாவளி காற்று வீசியதால் பழமையான மரம் ஒன்று மாட்டுக்கொட்டகை மீது வேரோடு சாய்ந்தது. இதில் மாட்டுக் கொட்டகை மொத்தமும் சரிந்து விழுந்ததில் பழனியாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அங்கிருந்த பசுமாடும் பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் கனமழையால் மரம் சாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்தவரின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தசம்பவம் குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story