பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பிளஸ்-2 மாணவர் பலி


பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பிளஸ்-2 மாணவர் பலி
x
தினத்தந்தி 20 April 2021 4:25 PM GMT (Updated: 2021-04-20T21:55:24+05:30)

பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். செய்முறை தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

கீரனூர்:
பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். செய்முறை தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பிளஸ்-2 மாணவர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கொக்கரக்கல்வலசு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 
தமிழகம் முழுவதும் நேற்று 2-வது கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. அதன்படி, இந்த செய்முறை தேர்வை எழுதுவதற்காக நேற்று காலை சதீஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் கீரனூரில் உள்ள தேர்வு மையத்துக்கு சென்றார். அப்போது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (17), அத்திமரத்துவலசை சேர்ந்த யோகேஷ் (17) ஆகியோரையும் தன்னுடன் அழைத்து சென்றார். 
வேன் மோதியது
இந்தநிலையில் தேர்வு முடிந்த பிறகு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கொக்கரக்கல்வலசு கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை யோகேஷ் ஓட்டினார். சதீஷ்குமார், ரமேஷ்குமார் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். 
கீரனூரை அடுத்த சண்முகநதி ஆற்றுப்பாலம் அருகில் அவர்கள் வந்தபோது, எதிரே வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரமேஷ்குமார், யோகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். 
விபத்தை கண்டதும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக கீரனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போலீசார், விபத்தில் படுகாயமடைந்த யோகேஷ், ரமேஷ்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பலியான சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த சுப்புராம் என்பவரை கைது செய்தனர். 
செய்முறைத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் கொக்கரக்கல்வலசு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story