கொடைக்கானல் அருகே சாலை பராமரிப்பு பணிக்காக மலைப்பாதை துண்டிப்பு


கொடைக்கானல் அருகே சாலை பராமரிப்பு பணிக்காக மலைப்பாதை துண்டிப்பு
x
தினத்தந்தி 20 April 2021 4:34 PM GMT (Updated: 2021-04-20T22:04:22+05:30)

கொடைக்கானல் அருகே சாலை பராமரிப்பு பணிக்காக மலைப்பாதை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் இருந்து பெருமாள்மலை, அடுக்கம், கும்பக்கரை அருவி வழியாக தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அந்த பாதை திறக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இருப்பினும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. 
ஆனால் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த மலைப்பாதையின் குறுக்கே பாறைகள் உருண்டு விழுவதுடன், மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது. எனவே திறக்கப்படாத அந்த சாலையில் மீண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, அடுக்கம் செல்லும் மலைப்பாதையில் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் சாலை துண்டிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. மலைப்பாதை துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலை பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலை பராமரிப்பு பணிக்காக அடுக்கம் மலைப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஒருமாத காலத்திற்குள் முடித்து, இலகுரக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றனர். 

Next Story