இரவு நேர ஊரடங்கு அமல் புதுக்கோட்டை பஸ் நிலையம் வெறிச்சோடியது


இரவு நேர ஊரடங்கு அமல் புதுக்கோட்டை பஸ் நிலையம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 20 April 2021 6:01 PM GMT (Updated: 2021-04-20T23:31:17+05:30)

கொரோனா பரவல் எதிரொலியாக இரவு நேர ஊரடங்கு அமலானதால் புதுக்கோட்டை பஸ் நிலையம் வெறிச்சோடியது.

புதுக்கோட்டை:
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து 20-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலானதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை நேற்று இரவு 10 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இரவில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். 
மேலும் திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். இதனால் பயணிகள் கூட்டம் இரவிலும் காணப்படும். இரவு நேர ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள் இரவு 10 மணிக்கு முன்பாக பணிமனைக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.
சாலையோர கடைகள் அடைப்பு
இதேபோல தொலைதூரத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் இரவு 10 மணிக்கு முன்பாக அந்த ஊரை சென்றடையும் வகையில் புதுக்கோட்டையில் இருந்து இரவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஊரடங்கு அமலின் காரணமாக இரவில் ஆட்டோ, கார்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஓட்டல்களும், கடைகளும், சாலையோர கடைகளையும் இரவு 10 மணிக்குள் பூட்டினர். பஸ் நிலைய பகுதிகளில் இரவில் கடைகள் இயங்கும் அந்த கடைகளும் அடைக்கப்பட்டன. 
பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் நகரப்பகுதியில் சாலைகள் காணப்பட்டன. அவசர மற்றும் மருத்துவ உதவிக்கான காரணங்களுக்கு மட்டும் ஆட்டோ, கார்கள் இயக்கப்பட்டன.
 இரவில் பஸ்கள் இல்லாததால் ஒரு சில பயணிகள் பஸ் நிலையத்தில் தவித்தப்படி நின்றனர். அவர்களை அதிகாரிகள் அழைத்து சென்று நகராட்சி அலுவலக வளாகத்தில் தங்க வைத்தனர். 
மதுப்பிரியர்கள்
டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்பாக 9 மணிக்கு மூடப்படும் உத்தரவும் நேற்று அமலுக்கு வந்தது. இரவு 9 மணிக்கு கடையை மூடப்படுகிற நேரத்தில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காகும். அன்றைய தினம் காய்கறிகடைகள், இறைச்சி கடைகள் என எந்த கடைகளும் இயங்காது.  மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதிகாலை 4 மணி முதல் வழக்கம் போல பஸ்கள், வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நடைபெறும்.
கலெக்டர் ஆய்வு
இதேபோல் அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி, கோட்டைப்பட்டினம், விராலிமலை, திருமயம், கந்தர்வகோட்டை, அன்னவாசல், கறம்பக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், இரவு 10 மணிக்கு தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் சுற்றியவர்களை பிடித்து எச்சரித்தும், முக கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.  இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபட்டதையொட்டி புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story