ஆசிரியையிடம் தாலி சங்கிலியை பறித்த வாலிபர்


ஆசிரியையிடம் தாலி சங்கிலியை பறித்த வாலிபர்
x
தினத்தந்தி 20 April 2021 6:32 PM GMT (Updated: 20 April 2021 6:32 PM GMT)

காரைக்குடியில் ஆசிரியையிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை கண்காணிப்பு கேமரா காட்சி உதவியால் போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

காரைக்குடியில் ஆசிரியையிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை கண்காணிப்பு கேமரா காட்சி உதவியால் போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

காரைக்குடி செக்காலை பகுதியை சேர்ந்தவர் நல்லம்மை (வயது 34).இவர் மானகிரியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் பணியாற்றும் சக ஆசிரியை மதிவதனி. சம்பவத்தன்று இருவரும் பள்ளியில் வேலை முடிந்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மதிவதனி ஸ்கூட்டியை ஒட்ட நல்லம்மை பின்னால் அமர்ந்திருந்தார்.
நெசவாளர் காலனி அருகே வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் நல்லம்மை கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டான். இதுகுறித்து நல்லம்மை குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணையில் இறங்கினார்.

கண்காணிப்பு கேமரா

 விசாரணையில் கோவிலூர் போலீஸ் சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சங்கிலித்திருடன் சென்ற நவீன மோட்டார் சைக்கிள் தெரிந்தது. அனால் திருடனை அடையாளம் காணமுடியவில்லை. ஆனாலும் அந்த மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் டீலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த ரக மோட்டார் சைக்கிள் இதுவரை ஒன்று மட்டுமே விற்பனையாகியுள்ளது எனக்கூறி அதனை வாங்கியவரின் முகவரியை டீலர் கொடுத்துள்ளார். கொரட்டி என்ற கிராமத்தில் உள்ளஅம்முகவரியில் வசித்து வந்த, சமீபத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு வந்துள்ள கலைதாஸ் (வயது 25) என்பவரை போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். உடனே போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

கைது

அப்போது கலைதாஸ், ஆசிரியை நல்லம்மையிடம் சங்கிலி பறித்ததை ஒப்புக்கொண்டார்.அதன்பின் கலைதாஸ் வீட்டில் மறைத்து வைத்திருந்த 5 ½ பவுன் தங்க சங்கிலியை போலீசார் மீட்டனர்.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் காரைக்குடி- குன்றக்குடி சாலையில் கோட்டைக்களியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சுபா (24) என்பவரிடம் 3½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதும் கலைதாஸ்தான் என்பதும் தெரியவந்தது.பறிபோன நகைகள் மீட்கப்பட்டன. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியினை கைது செய்து நகைகளை மீட்ட இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீஸ் குழுவினரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story