வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபடும் மீனவர்கள்


வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபடும் மீனவர்கள்
x
தினத்தந்தி 20 April 2021 6:58 PM GMT (Updated: 2021-04-21T00:28:27+05:30)

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் மீன்பிடி தடை காலம் என்பதால் வலைகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் மீன்பிடி தடை காலம் என்பதால் வலைகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
மீன்பிடி தடை காலம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 மேற்பட்ட விசைப்படகுகள், 450 மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படகுகள் உள்ளிட்ட படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். திருமுல்லைவாசல் துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மீன்பிடி தடை காலத்தையொட்டி கடந்த 15-ந் தேதி முதல்  அனைத்து படகுகளும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வது நிறுத்தப்பட்டு விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரமாக...
தொடர்ந்து 60 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியும். இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு போதிய வருவாய் இன்றி வருடம் தோறும் மீன்பிடி தடை காலம் நாட்களில் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை ரூ.10 ஆயிரமாக  உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
வலைகளை பழுது பார்க்கும் பணி
இந்த நிலையில் தடை காலத்தையொட்டி திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள வலை பழுதுபார்க்கும் கூடத்தில் தங்களுடைய வலைகளை மீனவர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் உள்ள என்ஜின்களை சரி செய்யும் பணிகளையும், படகுகளை பழுதுபார்க்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றன தற்போது மீன்பிடி தடை காலம் இருப்பதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

Next Story