கேரளா சென்ற தோட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
கம்பம்மெட்டு சோதனை சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டதால், கேரளா சென்ற தோட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம்:
தோட்ட தொழிலாளர்கள்
தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் ஜீப்புகளில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கொரோனா பரிசோதனை சான்று
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் மற்றும் கொரோனா தொற்று இல்லை என சான்று வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, போடி மெட்டு மற்றும் குமுளி பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கேரள போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஜீப், பஸ்களில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு சென்றனர்.
அவர்களை கம்பம்மெட்டு சோதனை சாவடியில் இருந்த போலீசார் இ-பாஸ், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கேட்டனர்.
ஆனால் தோட்ட தொழிலாளர்கள் கொரோனா சான்றிதழ் இல்லை என தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் சோதனைசாவடியை கடந்து செல்ல அனுமதி மறுத்தனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த ஏராளமான பெண் தொழிலாளர்கள், கம்பம்மெட்டு சிலுவைக்கோவில் அருகே புறவழிச்சாலை சந்திப்பில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கம்பம் வடக்கு போலீசார் விரைந்து வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண் தொழிலாளர்கள், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏலக்காய் தோட்ட வேலைக்கு சென்று வருகிறோம்.
நாள்தோறும் அரசு மருத்துவமனையில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வது என்பது கடினமான விஷயம்.
மேலும் பரிசோதனை செய்தால் 2 நாளுக்கு பிறகு தான் சான்று கிடைக்கிறது. ஆனால் கேரள போலீசார் பரிசோதனை செய்து 48 மணி நேரத்திற்குள் சான்று கொண்டு வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.
எனவே இந்த பிரச்சினை சம்பந்தமாக இடுக்கி மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தி தடையின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டத்தொழிலாளர்கள் கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, கேரள போலீசாரிடம் பேசினார்.
அப்போது கேரள போலீசார் நிபந்தனையுடன் நேற்று ஒரு நாள் மட்டும் கேரளாவுக்குள் அனுமதிப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்ட தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு சென்றனர்.
இந்த சம்பவத்தால் கம்பம் புறவழிச்சாலை சிலுவைக்கோவில் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.
இதுகுறித்து கேரள போலீசார் கூறுகையில், கேரளாவில் கம்பம்மெட்டு கருணாபுரம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றனர்.
மேலும் இடுக்கி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் குறித்த பிரச்சினை விவாதிக்கப்படும்.
அதில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story