உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராணி ஆகியோர் உரக்கடைகளில் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், உர விற்பனை நிலையங்களில், உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல், உரங்களை விவசாயிகளுக்கு உரிய ரசீதுடன், ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உர உரிமத்தில் அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி அதிக உரங்கள் விற்றாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, விவசாயிகள் பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை 9787061637 என்ற செல்போன் எண்ணிலும், வேளாண்மை உதவி இயக்குனரை (தரக்கட்டுப்பாடு) 9487073705 என்ற எண்ணிலும், வேளாண்மை அலுவலரை (தரக்கட்டுப்பாடு) 9677799938 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் ஆயிரத்து 990 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. உரம் 667 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் உரம் ஆயிரத்து 71 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் ஆயிரத்து 903 மெட்ரிக் டன்னும் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரம் 307 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 5 ஆயிரத்து 938 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது, என்றனர்.
Related Tags :
Next Story