தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
கிணத்துக்கடவு சந்தையில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சந்தையில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
காய்கறி சந்தை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.
இங்கு வரும் காய்கறிகளை ஏலம் எடுக்க பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த சந்தைக்கு 5 ஆயிரம் பெட்டி (ஒரு பெட்டி 14 கிலோ) தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
கிலோ ரூ.7-க்கு விற்பனை
ஆனால் எதிர்பார்த்தபடி தக்காளிக்கு விலை கிடைக்கவில்லை. கிலோ ரூ.7-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த நேரத்தில் தக்காளி கிலோ ரூ.30 வரை விற்பனையாகும். ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டு உள்ளது.
எனவே இதுபோன்று நஷ்டம் ஏற்படுவதை தடுக்க தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சந்தையில் பச்சை மிளகாய் (கிலோ) ரூ.35, பீர்க்கன்காய் ரூ.40, பாகற்காய் ரூ.35, சுரைக்காய் ரூ.7, அவரைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.8, பெரியல் தட்டை பயிறு ரூ.22-க்கு விற்பனையானது.
Related Tags :
Next Story