நாகை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் சக்கர நாற்காலியில் இருந்து தள்ளி விடப்பட்டாரா?


நாகை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் சக்கர நாற்காலியில் இருந்து தள்ளி விடப்பட்டாரா?
x
தினத்தந்தி 23 April 2021 6:09 PM GMT (Updated: 23 April 2021 6:09 PM GMT)

நாகை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் சக்கர நாற்காலியில் இருந்து தள்ளிவிடப்படுவது போல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், 

நாகை அருகே உள்ள திட்டச்சேரி தேவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி ராதா. இவர்களுடைய மகள் முருகவள்ளி(வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முருகவள்ளி, திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அங்கிருந்து பரிசோதனை முடிவு வருவதற்குள் முருகவள்ளிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து அவர் பிரசவத்துக்காக நாகை அரசு மருத்துவமனையில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சையின் மூலம் 19-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

சக்கர நாற்காலியில் அழைத்து சென்றார்

கொரோனா பரிசோதனை முடிவு வராததால், முருகவள்ளி நாகை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் 21-ந் தேதி முருகவள்ளிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தது. இதையடுத்து உறவினர்கள் முருகவள்ளியை சாதாரண வார்டுக்கு மாற்றும்படி மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினர்.

இதையடுத்து முருகவள்ளியை கொரோனா வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றார்.

கீழே தள்ளி விட்டுள்ளார்

அப்போது அந்த பெண் பணியாளர், முருகவள்ளியின் உறவினர்களிடம் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் தனக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள், ‘எங்களை போன்று பணம் இல்லாதவர்கள் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம், எங்களிடம் பணம் கேட்கலாமா? என்று கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் பணியாளர், முருகவள்ளியிடம் மனம் நோகும்படி வார்த்தைகளை பேசியதாகவும், அவரை திடீரென சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

இதை கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிரசவித்த பெண்ணை இப்படியா கவனம் இல்லாமல் அழைத்து வந்து கீழே தள்ளி விடுவது? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் தற்போது இந்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருவதால் நாகையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story