‘நீங்களே முக கவசம் அணியாமல் எங்களுக்கு அபராதம் விதிப்பதா?’ என கேட்ட வியாபாரியை தாக்கிய மாநகராட்சி ஊழியர்கள்
அபராதம் விதிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் முக கவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது.
திரு.வி.க. நகர்,
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் நேற்று அத்திப்பட்டு பகுதியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது ஐ.சி.எப். காலனியில் உள்ள துணிக்கடை மற்றும் ஒரு அரிசி கடையில் வாடிக்கையாளர்கள் முககவசம் போடவில்லை என்று கூறி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அப்போது அபராதம் விதிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் முக கவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடை உரிமையாளர்கள், “எங்களை முககவசம் அணியவில்லை என அபராதம் விதிக்கும் நீங்கள் முககவசம் அணிந்து உள்ளீர்களா?” என தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த மாநகராட்சி ஊழியர்கள், அரிசி கடை உரிமையாளர் லட்சுமணன் (வயது 44) என்பவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் மாநில தலைவர் சவுந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் வியாபாரி லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கடைகளுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமல் வருவதுடன், அபராத ரசீதில் அன்றைய தேதிக்கு பதில் வேறு தேதிகளை போட்டு ரசீது வழங்குவதாகவும் வியாபாரிகள் புகார் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story