மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் சொகுசு காரில் கடத்தி வந்த ரூ.18 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் - வாலிபர் கைது
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் சொகுசு காரில் கடத்தி வந்த ரூ.18 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
கொரோனா தொற்று பரவல் காரணமாக மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் காலை 11 மணிக்கு மேல் அத்தியாவசிய பணிகளை தவிர மற்றவர்கள் சாலைகளில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் போலீசார் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை வழிமறித்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காரில் எல்.எஸ்.டி. என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காரில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் மலாடு பகுதியை சேர்ந்த மணிஷ்(வயது27) என்பதும், போதைப்பொருளை கடத்தி வந்து சமூகவலைதளத்தில் தொடர்பு கொள்ளும் ஆசாமிகளுக்கு வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் கடந்த 2019-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்டு ஜாமீனில் வெளியே வந்து உள்ளார் என்பதும் தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story