மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜன் விடுதலை
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி கொலை வழக்கில் இருந்து நிழல் உலக தாதா சோட்டா ராஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 250-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் ஹனிப் கடவாலா. இவர் மும்பை குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றுவதற்காக ஆயுதங்களை மும்பைக்கு கடத்தி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவர் கடந்த 2001-ம் ஆண்டு அலுவலகத்தில் இருந்த போது 3 பேரால் கொலை செய்யப்பட்டார். இதில் பொதுமக்களிடம் அனுதாபம் பெற மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதேபோல ஹனிப் கடவாலா கொலை சம்பவத்திலும் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளி ஜெகன்நாத் ஜெய்ஸ்வால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த நீதிபதி வான்கடே சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என அவர்கள் 2 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கடந்த 2015-ம் ஆண்டு கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story