ஆயிரம்விளக்கு பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் தீ விபத்து


ஆயிரம்விளக்கு பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 26 April 2021 10:39 AM IST (Updated: 26 April 2021 10:39 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரம்விளக்கு பகுதியில் இயங்கி வந்த தனியார் ஐ.டி. நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னை, 

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பட்டறை சாலையில் 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. அதன் முதல் மாடியில் தனியாருக்கு சொந்தமான ஐ.டி. நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முழு ஊரடங்கு என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நிறுவனத்தில் பணியாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.

நேற்று காலை 11 மணியளவில் முதல் மாடியில் செயல்பட்டு வந்த ஐ.டி.நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் எழும்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஐ.டி.நிறுவனத்தில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு கொழுந்துவிட்டு எரிந்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனியார் நிறுவன அலுவலகத்தில் மின் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அதன் அருகில் இருந்த ‘சோபா’வில் தீப்பிடித்து, அங்கிருந்த மளமளவென 4 அறைகளுக்கும் தீ பரவியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் 4 அறைகளில் இருந்த கம்ப்யூட்டர்கள், நாற்காலிகள், எலக்ட்ரிக்கல் சாதனங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் போலீசார் தெரிவித்தனர். தீ விபத்தின்போது அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story