பி.கே.சி. முகாமில் கொரோனாவுக்கு பலியான மூதாட்டியின் உடலை மாற்றி ஒப்படைத்த அவலம் போலீஸ் விசாரணை


பி.கே.சி. முகாமில் கொரோனாவுக்கு பலியான மூதாட்டியின் உடலை மாற்றி ஒப்படைத்த அவலம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 April 2021 6:09 PM IST (Updated: 26 April 2021 6:09 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு பலியான மூதாட்டியின் உடலை வேறொரு குடும்பத்தினரிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பி.கே.சி.யில் நடந்து உள்ளது.

மும்பை,

மும்பையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மும்பை பி.கே.சி.யில் உள்ள கொரோனா மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த சிகிச்சை முகாமில் சங்கீதா (வயது67) என்ற மூதாட்டி டி-58 என்ற நம்பர் கொண்ட படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று சங்கீதாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை டி-78 என்ற படுக்கைக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.

இதனால் டி.78 படுக்கை எண் பதிவேட்டில் இருந்த முகவரியின் படி ஆஸ்பத்திரி நிர்வாகம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி அவர்கள் அங்கு வந்து தவறுதலாக சங்கீதாவின் உடலை பெற்று இறுதி சடங்குகளை செய்து முடித்தனர்.

இதற்கிடையில் மூதாட்டி சங்கீதாவின் மகன் அபய் என்பவர் பி.கே.சி. சிகிச்சை மையத்திற்கு வந்தபோது, சங்கீதா இல்லாததால் அதிகாரிகளிடம் விசாரித்தனர்.

அப்போது கண்காணிப்பு கேமராவில் நடத்திய ஆய்வில் பலியான சங்கீதாவின் உடலை தவறுதலாக வேறொரு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story