ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? தமிழக அரசு உத்தரவு


ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2021 7:54 AM IST (Updated: 28 April 2021 7:54 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

இதுகுறித்து ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, கீழ் நிலை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது தெரிந்ததே. இதற்காக மாநில அரசு, பகுதிநேர ஊரடங்கை அறிவித்ததோடு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், பலருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. ஊரக பொருளாதார மேம்பாட்டுக்கு வாரத்திற்கு ரூ.180 கோடியை இந்தத் திட்டம் வழங்குகிறது.

பாதுகாப்பு நடைமுறைகள்

கொரோனா தொற்று தொடர்ந்தாலும், இந்தத் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வாழ்வாதாரத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டியது கடமையாக உணரப்படுகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும்போது, பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

எனவே வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் வேலை தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சில வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அதன்படி,

நோயுற்றவர்கள்

* 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே நோயுற்றவர்கள், இருதய நோய், மூச்சுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த வேலைக்கு சேர்க்கப்படமாட்டார்கள்.

* சளி, இருமல், தும்மல், மூச்சு விடுவதில் பிரச்சினை, லேசான காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேலை தரப்படமாட்டாது. அப்படிப்பட்ட நோயுள்ளவர்கள் உடனடியாக வேலையில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.

* சிறு சிறு குழுவாக பிரிந்து சமூக இடைவெளிவிட்டு அவர்கள் பணியாற்ற வேண்டும்.

* வேலையாட்களை கூட்டமாக வாகனங்களில் அழைத்துவரக் கூடாது.

* வேலை நேரத்தில் அனைவரும் முக கவசம் அணிவதோடு 2 மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

* சோப்பினால் கைகழுவும் வசதி, அனைத்து பணியிடங்களிலும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

துப்பக்கூடாது

* பணியிடங்களில் வேலையாட்கள் யாரும் வெற்றிலை, புகையிலை மென்று துப்பக்கூடாது.

* காய்ச்சல், இருமல், சளி உள்ள வேலையாட்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

* சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்டவற்றை ஒருவருக்கு ஒருவர் பரிமாறக் கூடாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக தண்ணீர் பாட்டில் கொண்டு வர வேண்டும்.

* 45 வயதுக்கு மேற்பட்ட வேலையாட்கள் ஒவ்வொவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story