கடந்த 2 நாட்களில் கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளது சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
முழு ஊரடங்கு, புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கடந்த 2 நாட்களில் ஏறும் விகிதத்தில், சற்று குறைந்திருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நோய் கண்டறிதல் மையத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கடந்த 2 நாட்களில் ஏறும் விகிதத்தில், சற்று குறைந்திருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறி. ஆனால் நாம் இதையே நம்பிக்கொண்டு இருக்க முடியாது.
எனவே, நாம் அனைவரும் முககவசம் அணிதல், தேவையில்லாமல் வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
திணறும் நிலை
அடுத்த சில நாட்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றவேண்டும். கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்திய அளவில் கொரோனா பரவலால் திணறும் நிலை இருக்கிறது.
அதனால் தமிழகத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நமக்கு பாதிப்பு குறைவாகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தில் பார்க்கக்கூடாது. அது தவறான கருத்து. ஒரு நாளுக்கு 15 ஆயிரம் நோய்த்தொற்று என்றால் கூட, அதில் 30 சதவீதம் பேர் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள்.
நோய் கண்டறிதல் மையத்தில் எக்ஸ்-ரே எடுத்தும், ரத்த மாதிரி சோதனை செய்தும் நோயாளிகளை தரம் பிரித்துவிடுவார்கள். நோய் கண்டறிதல் மையத்தை முழுமையாக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள்
கடந்த 2 நாட்களில் நோய்த்தொற்று குறைந்திருக்கிறது.
12 ஆயிரம் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் 2 ஆயிரம் படுக்கைகள் இந்த வாரத்துக்குள் தயாராகி விடும். சென்னையை போல கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 12 ஆயிரத்து 31 இடங்கள் இருக்கிறது. கொரோனா மருத்துவமனை, கொரோனா கவனிப்பு மையங்களில் 3 ஆயிரத்து 570 இடங்கள் இருக்கிறது. இருப்பினும் இரவு நேரங்களில் சென்னை அரசு ஆஸ்பத்திரி, கிங் ஆஸ்பத்திரி மற்றும் ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதால் செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்காக காலை நேரங்களிலேயே நோய் கண்டறிதல் மையத்துக்கு வந்துவிடுங்கள்.
5 சதவீதத்துக்கும் கீழ் குறைவு
நோய் கண்டறிதல் மையத்தில் நோய் அதிகப்படியாக இருந்தால் அவர்களே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார்கள். அப்படி இல்லாமல், லேசான அறிகுறி இருந்தால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறலாம். தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படுவதாக செய்திகள் வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு வீணாக்கப்படுவதை 5 சதவீதத்துக்கும் கீழ் குறைத்துவிட்டோம்.
அடுத்த சிலவாரம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு பணியில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வீட்டில் இருந்தால் கூட, வீட்டிலும் அவரும், மற்றவர்களும் முககவசம் அணிய வேண்டும். கடந்த 2 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்வது குறையவில்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தமிழக மருத்துவ சேவைகள் கழகம் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்கிறது.
குஜராத் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பதாக செய்திகள் வருகிறது. எனவே மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. ரெம்டெசிவிர் மருந்து மையங்கள் படிப்படியாக மற்ற இடங்களிலும் தொடங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள்
மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் ரெம்டெசிவிர் மருந்து வாரந்தோறும் வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய வீட்டுக்கு அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி நலத்துறையிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கள்ளச்சந்தை விற்பனை தடுக்க...
பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘குஜராத்தில் இருந்து கள்ளச்சந்தை மூலமாக தனியார் மருத்துவமனைகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்வதை தடுப்பதற்காக, அரசே நேரடியாக தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வினியோகம் செய்ய புதிய முயற்சியை தொடங்கினோம்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story