இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் மனைவி சாவு


இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் மனைவி சாவு
x
தினத்தந்தி 28 April 2021 9:42 AM IST (Updated: 28 April 2021 9:42 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூரில் கணவர் இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியானார்.

பெரம்பூர், 

கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 57-வது தெரு 1-வது பிளாக்கை சேர்ந்தவர் மகா மணி (வயது 65). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு பாப்பாத்தி (58) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் செய்து தனித்தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மகாமணி பணிக்கு செல்லும்போது சென்னை வால்டாக்ஸ் சாலையில் மினி வேன் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த தகவலை அறிந்த யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பலனின்றி இறந்தார்.

இந்த நிலையில், யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மகாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து நேற்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மனைவி சாவு

இதற்கிடையே, கணவர் இறந்த தகவலை அறிந்த மனைவி பாப்பாத்தி மனமுடைந்து சோகத்தில் காணப்பட்டார். அதைத்தொடர்ந்து, நேற்று 3 மணி அளவில் இறுதி சடங்கிற்காக பிணத்தை அருகிலுள்ள மாதவரம் சுடுகாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது சுடுகாடு வரை வந்த பாப்பாத்தி கடைசியாக கணவரின் முகம் பார்க்க வந்த நிலையில், மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு, கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாப்பாத்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கணவர் இறந்த மறுநாளே சோகம் தாங்க முடியாமல் மனைவியும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

Next Story