விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை


விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 28 April 2021 10:13 PM IST (Updated: 28 April 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

விழுப்புரம், 


தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது.

 வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் என்று அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. 

இவர்களில் யாரேனும் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பி.சி.ஆர். சோதனை தேவையில்லை என்றும் தெரிவித்து இருந்தது.

கொரோனா பரிசோதனை

அதன்படி விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக நேற்று விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அங்கு வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடக்கூடியவர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

விக்கிரவாண்டி

அதேபோல்  விக்கிரவாண்டி  தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள வேட்பாளர்கள் அ.தி.மு.க. முத்தமிழ்செல்வன், தி.மு.க. புகழேந்தி, அ.ம.மு.க. அய்யனார், ஐ.ஜே.கே  செந்தில், நாம் தமிழர் கட்சி் ஷீபா ஆஸ்மி உள்பட 14 வேட்பாளர்கள் மற்றும் 238 முகவர்களுக்கு நேற்று  தாலுகா அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர்கள் ராமகிருஷ்ணன், கார்த்திக், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு, செவிலியர்கள் முத்து ராமலிங்கம், சரோஜா. ஆய்வக நுட்பனர் ஆபேல் ராஜ், நோய் தடுப்பு பணியாளர்கள் வாசு, வீர சேகர், வெங்கடாஜலம் ஆகியோர்கொண்ட குழுவினர் கொரோனா மாதிரிகள் சேகரித்தனர். மேலும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடபட்டது.

தடுப்பூசி

இதேபோல்  செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் ஆகிய தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடக்கூடிய அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் நேற்று கொரோனா பரிசோதனை செய்ய விரும்பாத சிலர், தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

இன்றும் (வியாழக்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்றைய தினம் (நேற்று) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதன் முடிவுகளில் நோய் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டவர்களுக்கு மட்டுமே அந்தந்த துறை அதிகாரிகள் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றனர்.

Next Story