கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் படுகொலை; தொழிலாளி வெறிச்செயல்


கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் படுகொலை; தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 29 April 2021 9:12 PM GMT (Updated: 29 April 2021 9:12 PM GMT)

மைசூரு அருகே குடிபோதை தகராறில் கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேரை படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மைசூரு: மைசூரு அருகே குடிபோதை தகராறில் கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேரை படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

4 மாத கர்ப்பிணி 

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா சாமேகவுடன உண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ட சாமி. இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கங்கா(வயது 28). இந்த தம்பதிக்கு ரோகித்(4), சமர்த்(2) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கங்கா 3-வது முறையாக கர்ப்பம் அடைந்து இருந்தார். அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

இந்த நிலையில் மணிகண்ட சாமி வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தில் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மணிகண்ட சாமிக்கும், கங்காவுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்து உள்ளது. 

இரும்பு கம்பியால் தாக்குதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் மணிகண்ட சாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது கங்கா, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இனி உங்களுக்கு வேலை இருக்காது. இருக்கும் பணத்திலும் குடித்துவிட்டு வந்தால் குடும்பத்ைத எப்படி நடத்துவது என்று கேட்டதாக தெரிகிறது. 

இது குடிபோதையில் இருந்த மணிகண்ட சாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் கங்காவை அடித்து, உதைத்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் கங்காவின் தாய் கெம்பஜம்மா, மணிகண்ட சாமியை தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மணிகண்ட சாமி வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கங்கா, கெம்பஜம்மா ஆகியோரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 

குடிபோதை தகராறில்...

ஆனாலும் ஆத்திரம் அடங்காத மணிகண்ட சாமி, வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மகன்கள் ரோகித், சமர்த் ஆகியோரையும் இரும்பி கம்பியால் தாக்கினார். இதில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்ட சாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சரகூரு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்ற சரகூரு போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கங்கா, கெம்பஜம்மா, ரோகித், சமர்த் ஆகியோரின் உடல்களை பார்வையிட்டனர்.

 பின்னர் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி மனைவி, மாமியார், மகன்களை இரும்பி கம்பியால் தாக்கி மணிகண்ட சாமி படுகொலை செய்தது தெரியவந்தது. 

பரபரப்பு 

இந்த சம்பவம் குறித்து சரகூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்ட சாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 
குடிபோதையில் தகராறில் கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேரை தொழிலாளி கொலை செய்த சம்பவம் மைசூரு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story