சென்னை தாம்பரத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் கைது


சென்னை தாம்பரத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 4:49 AM IST (Updated: 30 April 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தாம்பரத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

‘ரெம்டெசிவிர்’

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்தை உயிர்காக்கும் மருந்தாக டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகளில் இந்த மருந்துக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். இதையடுத்து தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் இந்த மருந்து கொள்முதல் செய்யப்பட்டு அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நீண்டநேரம் காத்து இருந்து வாங்கிச் செல்கின்றனர்.

கள்ளச்சந்தையில் விற்பனை

இந்தநிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் வாங்கி, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். அவரிடம் இருந்து சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டரான முகமது இம்ரான்கான்(வயது 26) என்பவர் 4 ஆயிரத்து 700 ரூபாய் மருந்தை ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்று வந்தார். அவருடைய நண்பரான விஜய்(27) என்பவரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

டாக்டர் கைது

இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி. சாந்திக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது டாக்டர் முகமது இம்ரான்கானை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை, கள்ளச்சந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார். உடந்தையாக இருந்த நண்பர் விஜயும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story